×

சூப்பர் ருசியால்… செம டிமாண்ட் சிங்கப்பூருக்கு பறக்குது ஆண்டிபட்டி வெண்டை -தினமும் 2 டன் ஏற்றுமதியால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் வெண்டைக்காய்கள், சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள புள்ளிமான்கோம்பை, தர்மத்துப்பட்டி, மூனாண்டிபட்டி, அணைக்கரைப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் காய்கறி சாகுபடி அதிகளவில் நடைபெறுகிறது. பொதுவாக இங்கு விளையும் காய்கறிகள் ஆண்டிபட்டி மற்றும் சின்னமனூர் சந்தைகள் மூலம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும், கேரள மாநிலத்திற்கும் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். தற்போது இந்த பகுதிகளில் குறுகிய கால காய்கறி பயிரான வெண்டைக்காய் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இங்கு விளையும் வெண்டைக்காய் தரமானதாகவும், சத்துக்கள் மிகுந்ததாகவும் காணப்படுவதால் வியாபாரிகள் நேரடியாக வந்து கொள்முதல் செய்து செல்கின்றனர். மேலும், சிங்கப்பூருக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு வரையில் வாரத்திற்கு 2 முறை மட்டுமே சிங்கப்பூருக்கு வெண்டைக்காய்கள் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. ருசி காரணமாக இந்த வெண்டைக்காய்களுக்கு அங்கு டிமாண்ட் அதிகரித்துள்ளதால், தற்போது தினமும் சுமார் 2 டன் அளவிலான வெண்டைக்காய்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக, புள்ளிமான்கோம்பை சுற்றுவட்டார பகுதிகளுக்கு தினமும் வாகனங்களுடன் வரும் வியாபாரிகள் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து அட்டைப்பெட்டிகளில் பேக்கிங் செய்து, திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு செல்கின்றனர். அங்கிருந்து தினமும் மாலை 6 மணிக்கு சிங்கப்பூர் புறப்படும் விமானத்தில் வெண்டைக்காய்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த பகுதியில் விளையும் வெண்டைக்காய்களை தரத்திற்கு ஏற்றவாறு தற்போது ரூ.30 முதல் ரூ.40 வரையில் விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்கிச்செல்கின்றனர். சாகுபடி செய்யும் விளைபொருளுக்கு நல்ல விலை கிடைப்பதால் வெண்டைக்காய் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post சூப்பர் ருசியால்… செம டிமாண்ட் சிங்கப்பூருக்கு பறக்குது ஆண்டிபட்டி வெண்டை -தினமும் 2 டன் ஏற்றுமதியால் விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Singapore ,Andipatti ,Dinakaran ,
× RELATED பலத்த சூறைக்காற்று காரணமாக பெங்களூரு...